30 April 2005 

ஜெயகாந்தனின் 'நாய்' பேச்சு

JK-dog speech dog
சமீபத்தில் ஞானபீட விருது பெற்ற ஜெயகாந்தனுக்கு சென்னை சமஸ்கிருத சமிதியின் சார்பில் பாராட்டு விழா நடந்தது.

அங்கு சமஸ்கிருதத்தை புகழ்ந்து பேசினார் ஜெயகாந்தன். சமஸ்கிருதத்தை புகழ்ந்ததோடு விட்டிருக்கலாம். ஆனால், அந்த மேடையில் தமிழை போட்டு வாங்கினார்.

அவர் பேசுகையில், தமிழில் தான் படிக்க வேண்டும், தமிழில் தான் பேச வேண்டும் என்று சொல்பவர்கள் தன்னைத் தானே நக்கிக் கொள்ளும் நாய்கள் என்றார்.

தமிழை வைத்து ஆதாயம் தேடும் அரசியல்வாதிகளைத் தாக்குகிறார் போலும் என்று அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்கள் நினைக்க, தொடர்ந்து பேசிய ஜெயகாந்தன்,
தமிழ் நமக்கு தாய் மொழி என்றால், சமஸ்கிருதம் அதை விட மேலானது என்று ஒரு போடு போட்டார். மேலும், சமஸ்கிருதத்தைப் பாராட்டும் சாக்கில் தமிழை கடுமையாக மட்டம் தட்டிக் கொண்டிருந்தார்.

அவரது பேச்சுக்கு சமஸ்கிருத சமிதியைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பலத்த கைத் தட்டல் எழுந்தது.

ஜெயகாந்தனின் இந்த நாய் பேச்சையும், தமிழை இறக்கிப் பேசியபோது எழுந்த கைத் தட்டலையும் கேட்டு நொந்து போனார் மேடையில் இருந்த முன்னாள் துணை வேந்தர் பொற்கோ.

அடுத்து மைக்கைப் பிடித்தவர், ஜெயகாந்தனின் பேச்சு பண்பற்றது, முறையற்றது என்று நாகரீகமாகச் சொல்லிவிட்டு பேச்சை முடித்துக் கொண்டார்.

ஜெயகாந்தனின் இந்த பேச்சு தமிழ் உணர்வாளர்கள் மத்தியில் கடும் எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. விரைவில் இதற்கென்று ஒரு கூட்டம் போட்டு நாய்ப் பேச்சுக்கு பதிலடி தர முடிவெடுக்கப்பட்டுள்ளது.

ஏதாவது சர்ச்சையை ஏற்படுத்துவது, அதிலேயே குளிர்காய்ந்து கொள்வது என்பது ஜெயகாந்தனுக்கு வழக்கமாகிவிட்டது.