24 February 2006 

கண்ணே ரம்பா...

என்ற ஊரு கோயம்புத்தூருங்க. நாம் பொறந்தப்போ எனக்கு சாமி கண்ண கொடுக்கலீங்க. எங்கய்யன் ரொம்ப வெசனப்பட்டு கோயிலுக்கு போயி, சாமிகிட்ட, என்ற பொண்ணுக்கு கண்ணக்குடுக்காம இப்டி பண்ணுப்புட்டியே, ஒனக்கு வேணுமின்னாக்க என்ற கண்ண எடுத்துக்கிட்டு ஒன்ற கண்ண குடுத்துருன்னு வேண்டிக்கிட்டாருங்க. சாமி போனாப்போவுதுன்னு எங்கய்யனோட கண்ண எடுக்காமயே எனக்கு கண்ணு குடுத்துடுச்சுங்க!

அட, என்னங்க அப்டி பாக்றீங்க!, நாங்கதாங்கனுங்க கோயம்புத்தூருகாரங்க, அந்த சாமி இல்லீங்க! அதுனாலதாங்க எங்கய்யன் ஒன்ற கண்ண குடுன்னு கேட்டத தப்பா புரிஞ்சிக்கிட்டு 1.5 கண்ண குடுத்துடுச்சுங்க!!

அதுனாலங்க, நீங்ககூட எதுனா சாமிகிட்ட கேக்றதுக்கு முன்னாடிங்க, அது எந்த ஊரு சாமின்னு பாத்துட்டு, பொறவு கேளுங்க ஒங்களுக்கு வேணுங்கறத, இல்லாட்டி ஒன்னு கெடக்க ஒன்னு ஆயிப்போயிடுங்க, ஆமா!!

21 February 2006 

நாலு வேதங்களும் ஏழு கம்பிகளும் - I'm tagged

Image hosting by Photobucket

நாலு பேருக்கு நல்லது நடக்கும்னா, தப்பில்ல... எதுமே தப்பில்ல- அப்டீன்னு சொன்னார் வேலு நாயக்கர்.

அஞ்சுக்குள்ள நால வையி... ஆழம்பாத்து கால வையி - அப்டீன்னு சொன்னார் சூப்பர் ஸ்டார்.

நாலு வேதங்களும் ஏழு கம்பிகளும்- அப்டீன்னு தொடர் எழுதுறாரு சதுர்வேதி சாமியார்.

நாலு பேரு என்னா சொல்வாங்களோன்னு தயக்கப் படுறவங்க செல பேரு.

நாலு பேருகிட்ட ஆலோசன கேட்டு செஞ்சா நல்லதுன்னு நெனக்கிறவங்க செல பேரு.

நாலு எடத்துக்குப் போய் வந்தாதானே வெளி ஒலகத்தப் பத்தி தெரிஞ்சுக்கலாம்னு சொல்லிக்குடுக்கறவங்க செல பேரு!

அதெல்லாஞ்சரி... நா எதுக்கு இப்போ நாலு நாலுன்னு சொல்றேன்னா...

எங்கள் தங்கம்
கொங்கு நாட்டுச் சிங்கம்
காதல் கடிதம் ஸ்பெஷலிஸ்ட்,
'அவள் விகடன்' புகழ்
தல ராசா அவர்கள்
என்னையும் கூட இந்த ஆட்டத்துலே இழுத்து வுட்ருக்காரு!
Yes, I'm (too) tagged by 'கொங்கு' ராசா !Four jobs I have had:
1. காலங்காத்தல போந்தா கோழிக்குஞ்சு மேய்க்கறது
2. சாய்ங்காலமா ஆடு மேய்க்கறது (அடப்புக்குள்ளாற)
3. நகர்வலம்!
4. repeat no. 1, 2 & 3

Four movies I would watch over and over again:
1. சலங்கை ஒலி
2. China Gate (Hindi)
3. மீசை மாதவன் (மலையாளம் - திலீப், காவ்யா)
4. Independence Day (English)

Four places I have lived (for years):
1. வூடு (உள்நாடு)
2. ஆபீஸ் (உள்நாடு)
3. வூடு (வெளிநாடு)
4. ஆபீஸ் (வெளிநாடு)


Four TV shows I love to watch:
1. சன் டி.வி. - சூப்பர் 10
2. ஜெயா டீ.வி - காமெடி பஜார்
3. விஜய் டீ.வி - லொள்ளு சபா
4. Cartoon Network - all

Four places I have been on vacation:
1. ஸ்பெயின்
2. எகிப்து
3. இமயமலை
4. சொந்த ஊர்

Four of my favourite foods:
1. தயிர் சாதம் + (வடு)மாங்கா ஊறுகா
2. Garlic Naan + Alu, Gobi masaala
3. Fried Chicken (KFC)
4. Pizza (Chicken BBQ)

Four places I'd rather be now:
1. 320-யோ இல்லாட்டி செவன்ஸோ போடறதுக்கு கூட்டாளிங்க ரூமுக்கு
2. பில் கட்டறதுக்கு ATMக்கு போயிருக்கலாம்
3. வண்டிய எடுத்துக்கிட்டு ச்சும்மாவாச்சும் ஒரு ரவுண்டு போயிருக்கலாம்
4. ஷாப்பிங் மால்-ல ரவுண்ட்ஸ்! போயிருக்கலாம்

Four sites I visit daily:
1. ஜிமெயில்
2. கூகிள்
3. தமிழ்மணம்
4. தேன்கூடு

Four bloggers I am tagging: *
1. நாமக்கல் சிபி
2. துபாய்வாசி
3. ஜொள்ளுப்பாண்டி
4. கோகுல் குமார்* சங்கிலித் தொடரில் பிணைக்கப்பட்ட 'நால்வர்'களே, உங்களுக்கு விருப்பமென்றால் நீங்களும் தொடரலாம்; மற்றபடி இது ஒன்றும் கட்டாயம் கிடையாது!! எல்லாம் ச்சும்மா.. ஒரு இதுக்குத்தான்; நன்றி!!!update: 24-Feb-'06

நாலு பேருக்கு நன்றி! - by நாமக்கல் சிபி

நாலு பேருக்கு நன்றி! - by துபாய்வாசி

நறுக்குன்னு நாலு ! - by ஜொள்ளுப்பாண்டி

நாலு பத்தி நான் என்னங்க பேசறது? - by கோகுல் குமார்

17 February 2006 

ஒரு பக்தர்

அடால்ப் ஹிட்லர் ஒரு மன நோயாளி என்ற உண்மை, நாஜி ஜெர்மனி வீழ்ச்சியுற்ற பிறகுதான் உலகுக்குத் தெரிய வந்தது. யூதர்களையும், ஜிப்ஸிகளையும், கம்யூனிஸ்டுகளையும்- ஏன், ஜெர்மானியர்கள் அல்லாத அனைவரையுமே நர வேட்டையாடி, மலை மலையாய்ப் பிணக் குவியல்களைக் குவித்த நாஜி ராணுவமே அந்த ஒருவரின் பைத்தியத்திற்கு ஆட்பட்டது. பகுத்தறிவு உடைய எவனுமே சற்று யோசித்தால் கற்பனையிலும் தாங்க முடியாத காரியங்களை ஒரு தேசத்தின் ராணுவமே செய்தது. அது பிற தேச ராணுவங்களையும்- தன்னுடைய பைத்தியக்கார வெறியை ஒரு நோய்போல் தொற்ற வைத்துத் தொடர்பும் உறவும் ஏற்படுத்திக் கொண்டது. ஒரு தலைவனின் ஆணை அல்லது ராணுவக் கட்டுப்பாடு என்பதன் பெயரால் உலகத்தையே அந்தக் கொலைவெறி குலுக்கி வைத்தது. அன்றைய ஜெர்மனியில் 'அடால்ப் ஹிட்லருக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறது' என்று ஆராய்ந்து கண்ட வைத்திய நிபுணர்களும் அதை வெளியே சொல்ல அஞ்சினர்.

ஒரு தனி மனிதனின் பைத்தியக்காரத்தனம் அவனது அதிகார பீடத்தால், அவனது சமுதாய அந்தஸ்தால், அவனது தேசியத் தலைமையால், ஒரு தேசத்தின், ஒரு காலத்தின் பைத்தியக்காரத்தனமாயிற்று.

முன்பு ஒருமுறை எனது ஸைக்கியாட்ரிஸ்ட் நண்பரிடம் நான் கேட்டேனே, அந்தக் கேள்வியையும் அவரது பதிலையும் மீண்டும் இங்கே நினைவுபடுத்திக் கொள்வோம்.

'இவர்களின் எண்ணிக்கை அதிகமாகி, நாம் குறைந்து போனால், நாம் உள்ளேயும் அவர்கள் வெளியேயும் இருக்க நேரிடும் அல்லவா?'

-'எண்ணிக்கையில் எவ்வளவு அதிகரித்தாலும் அவர்கள் ஒன்றிணைந்த பலமாக ஆக முடியாது... ஏனெனில், தனித்தனி நியாயங்களும் தனித்தனி நடைமுறைகளும் கொண்ட அவர்கள் சிதறுண்டு போன உலகங்கள். அவர்கள் ஒரு உலகத்தை நிர்வகிக்கவோ, அதன் தன்மையைத் தீர்மானிக்கவோ முடியாதவர்கள்' என்று நண்பர் சொன்னார்.

ஹிட்லரைப் பற்றிய, நாஜி ராணுவத்தைப் பற்றிய இந்த உதாரணம் நமது ஸைக்கியாட்ரிஸ்ட் நண்பரின் கூற்றுக்கு முரணாயிருக்கிறதே என்று தோன்றுகிறதல்லவா?

மனவியல் நிபுணர்கள் ஹிட்லருக்கு மட்டும்தான் பைத்தியம் என்று கண்டுபிடித்தார்கள். நாஜி ராணுவத்தைச் சேர்ந்த அனைவருக்கும் (அவர்களது பைத்தியக்காரத்தனத்தால் உலகமே பாதிக்கப்பட்டிருப்பினும் கூட) பைத்தியம் என்ற நோய் முற்றாகப் பிடித்து விட்டது என்று மருத்துவ சாஸ்திரம் சொல்லவில்லை. இங்கு நாம் முக்கியமாகப் புரிந்து கொள்ள வேண்டியது ஒன்று.

'பைத்தியம்' என்கிற நோய் வேறு. 'பைத்தியக்காரத்தனம்' என்கிற அறியாமை வேறு.

'வக்கரிப்பு' என்கிற மன நோய்க்கு ஆளான ஒருவனை ஒரு ஜன சமூகமே சர்வ வல்லமை பொருந்திய தலைவனாக ஏற்றுக் கொண்ட 'பைத்தியக்காரத்தனம்' என்ற அறியாமையினால் அல்லது தெய்வத்துக்கு நிகரான சர்வ வல்லமை பொருந்திய ஒரு தலைவனுக்குப் பைத்தியம் என்ற நோய் பிடித்த பிறகும் அதைப் புரிந்து கொள்ளாத ஒரு ஜன சமூகத்தின் பைத்தியக்காரத்தனம் என்கிற அறியாமையினால்தான் அந்தக் காரியங்கள் நடந்தேறின என்று புரிந்து கொண்டால், எனது ஸைக்கியாட்ரிஸ்ட் நண்பரின் கூற்றுக்கு இந்த உதாரணம் முரணல்ல என்பது தௌ¤வாகும்.

ஒரு பைத்தியக்காரனின் மூளைக்கோளாறு அவனுக்கு இருக்கும் அந்தஸ்தாலும், அவன் மீது பிறருக்கு இருக்கும் மதிப்பு மரியாதைகளினாலும் பல காலம் மறைந்திருக்கலாம். பைத்தியங்கள் புத்திசாலிகளாக - அதீத புத்திசாலிகளாகவும் இருக்க முடியும். அதே காரணத்தினாலேயே ஒரு மன நோயாளியின் மீது அறியாமல் வைத்திருக்கும் மதிப்பு மரியாதைகளின் காரணமாக அவனது நோய் மற்றவர்களையும் பாதிக்கிறது. சிலருக்குச் சில சமயங்களில் அந்த நோயே தொற்றி விடுவதும் உண்டு. சிறுகச் சிறுக அந்நோய்க்கு ஒரு தேசமே கூட இரையாகும்.

இந்த விதமாக, ஒரு குடும்பத் தலைவனுக்கு ஏற்பட்ட மனநோய் ஒரு குடும்பத்தையே பாதித்த சம்பவத்தை எனது ஸைக்கியாட்ரிஸ்ட் நண்பர் விளக்கிக் கூறினார்.

அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மற்றவர்கள் சிகிச்சையின் மூலம் விரைவாகவே குணமடைந்து விட்டார்கள். ஆனால் அந்தக் குடும்பத் தலைவர் இன்னும் கூடச் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கிறார். ரொம்பவும் முற்றிய கேஸ்!

அவர் ஒரு இன்கம்டாக்ஸ் ஆபிஸர். வீர வைஷ்ணவர். குடும்பமே பக்தி நெறியில் தழைத்தது. வீடே ஏறத்தாழ ஒரு கோயில் மாதிரி. இரவு பன்னிரண்டு மணிவரை- சில பண்டிகை நாட்களில் விடியும்வரை கூட- அவர் வீட்டில் பக்தர்களின் கும்பல் நிறைந்திருக்கும். நமது பக்தர், சிப்ளாக் கட்டையுடன் தன்னை மறந்த லயத்தில் ராம நாம சங்கீர்த்தனத்தில் நர்த்தனமாடிக் கொண்டிருப்பார். அவரது இளைய சகோதரரும், மனைவியும், ஆபிஸ் சிப்பந்திகளும் மற்றும் அவருடைய தாட்சண்யத்துக்காக, அவர் அழைப்பைத் தட்ட முடியாமல் அங்கு வந்து மாட்டிக் கொண்டவர்களும், அவருடன் சேர்ந்து அவரவர் பக்தியின் அளவிற்கேற்ப பகவான் நாமத்தைப் பூஜித்துக் கொண்டிருப்பார்கள்.

'பக்தியினால் ஒருவன் அமர நிலை எய்தலாம்' என்றும், 'எல்லா உயிர்களிலும் நானே இருக்கிறேன்' என்பதுவும் வைஷ்ணவர்களுக்கு மிகவும் உடன்பாடான கொள்கை. சொல்லப்போனால் அந்தக் கொள்கையே அவர்களுடையதுதான். சமூக வாழ்வுக்கு ஒரு வரைமுறை உண்டு அல்லவா?

ஒரு குடும்பத்துக்குரிய லட்சணமே இல்லாமல், சதா நேரமும் பக்தி என்ற பெயரால் களேபரம் மிகுந்த ஆண்டிமடமாக ஆயிற்று அந்த வீடு. தெரு வழியே போகின்ற எவனும் இந்த வீட்டிற்குள் தாராளமாய் நுழையலாம். நுழைந்தவன் எவனாயிருந்தாலும் "அடியேன் தாஸானுதாஸன்" என்று தன்னை அறிமுகம் செய்துகொண்டு, அவன் காலில் சாஷ்டாங்கமாய் விழுந்து கும்பிடுவார் ஆபிஸர்.

ஒரு நாளைக்கு ஆறு மணி நேரம் என்றிருந்த பஜனை, பன்னிரண்டு மணி நேரம், இருபத்து நாலு மணி நேரம் என்று வளர்ந்து, இரண்டு சூரிய உதயங்களையும் அஸ்தமனங்களையும் கூடத் தாண்டுகிற அளவுக்கு எல்லை மீறிய போது, பக்தருக்கு ஆபிசிலிருந்து அழைப்பு வந்தது. கால வரையின்றி பஜனை தொடர்ந்து நீண்டதால் கூட்டமும் குறைந்து போயிற்று. வேறு வழியில்லாது அவரது பியூன் மட்டும் "இது என்ன பக்தியோ? இது என்ன பஜனையோ!" என்று அலுத்துக் கொண்டு, அங்கேயே கிடந்தான்.

ஆபிசரின் மனைவியும், தம்பியும், அவரை ஒரு சிம்மாசனம் போன்ற நாற்காலியில் உட்கார வைத்து, கும்மி அடிப்பது போல் சுற்றிச் சுற்றி வந்து, அவர் முகத்திற்கு எதிரே வர நேரும்போதெல்லாம் ஒருமுறை வணங்கி எழுந்து, அவரை தெய்வ நிலைக்கு உயர்த்திக் கொண்டிருந்தனர். அவரில் அவர்கள் ராமனைக் கண்டு வழிபட்டுக் கொண்டிருந்தனர். அவர் எதனில், எதைக் கண்டாரோ?... சிலையாய் அமர்ந்திருந்தார், இராமர் பட்டாபிஷேக பாணியில் அபயஹஸ்தம் காட்டி... கையிலே கோதண்டமும் காலடியில் ஹனுமானும்தான் இல்லை, போங்கள்!

ஆபிசாவது, அழைப்பாவது?

கேவலம், அடிமைத் தொழில் யாருக்கு வேண்டும்?...

தபாலில் வந்த வேலை நீக்க உத்தரவைச் சற்றுத் தௌ¤ந்த நிலையில் தம்பிதான் வாங்கிப் படித்தார்.

'இராமரின் கொலு மண்டபத்'திற்குச் சென்று மிகுந்த பணிவுடன் கைகட்டி, வாய் பொத்தி, "அண்ணா" என்று அழைத்தார்.

"லட்சுமணா!" என்று புன்முறுவலோடு கண் திறந்தார்! "அதென்ன ஓலை?"

"அண்ணா! உங்க உத்தியோகம் போயிடுத்து!"

"எந்தையின் விருப்பம் அதுவெனில் இன்னும் ஒரு முறை வனம் ஏகலாம்."

"நான் இல்லாமலா?" என்று அவர் தர்ம பத்தினியும் கிளம்பி விட்டாள்.

"லட்சுமணா! பிரயாணத்திற்கு ஏற்பாடு செய்!"

இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த வேலைக்கார நாயுடுவுக்குக் கை கால் உதறல் கண்டுவிட்டது. "ஐயையோ" என்று ஒரு அலறலுடன் மனுஷன் ஓட்டம் எடுத்திருக்கிறார் பாருங்கள்... நேரே போலீஸ் ஸ்டேஷனில் போய்த்தான் நின்றிருக்கிறார். ஒரு பக்கம் பயம். ஒரு பக்கம் தாங்கமுடியாத சோகம். எப்படிப்பட்ட குடும்பம் எப்படிப்பட்ட வீழ்ச்சி அடைந்து விட்டது...

பக்தியின் பெயரால், பகவானின் பெயரால் அந்தக் குடும்பத்தின் சொத்துக்கள் யாவும் சூறையாடப்பட்டு விட்டன. பக்தி என்ற போதையில் ஏற்பட்ட பரவசத்தால் அவர்கள் தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டு நஷ்டப்பட்டு விட்டனர்.

படித்தவர், செல்வாக்கு மிகுந்தவர், அரசாங்க உத்தியோகஸ்தர் என்ற மதிப்புகளெல்லாம்- பக்தி என்பதன் பெயரால் அவருக்கு ஏற்படும் தெய்வ சந்நதம் ஒருவித 'ஹிஸ்டீரியா' என்று எவருமே சந்தேகிக்க இடமில்லாமல் செய்துவிட்டன.

புருஷன் மீது கொண்ட காதலால் ஒரு மனைவிக்கு அவன் தெய்வமாகவே இருக்கலாம். அந்தப் புருஷன் தன்னை ராமனாக உணர ஆரம்பித்த பிறகு, எல்லா விதங்களிலும் அவனது ஆளுகைக்கு உட்பட்ட அவளுக்குத் தானும் சீதையாக மாறுவதற்கு கசக்குமா என்ன? அவர்கள் மனப்பூர்வமாகவே அவ்விதம் பரஸ்பரம் நம்பினார்கள். அந்த நம்பிக்கைக்கு ஆதாரமான நியாயங்கள் அவர்களுக்கு மட்டுமே புரிவன.

மனோதத்துவ நிபுணர்கள் அவற்றினை ஆழ்ந்து பரிசீலித்து அவர்களது நியாயங்களை ஓரளவுக்கு கணிக்கலாம்.

நமது சமுதாயத்தில் கடவுள் நம்பிக்கையைவிட, பக்தர்களின் மீது கொள்ளும் மதிப்பே அதிகமானது. தனக்கு இருக்கும் இறை நம்பிக்கையை மிகையாகக் காட்டிப் பகிரங்கப்படுத்திக் கொள்வதில் பக்தர்களுக்குப் பரம சுகம் இருக்கிறது. அடிபணிந்து அடிபணிந்தே தமது பக்தர்கள் எவரையும் அடிமை கொள்கின்றனர்.

இந்த இன்கம்டாக்ஸ் ஆபிசரின் பக்தியில் மாசு கிடையாது. அது ஒரு பொய் வேஷமாக இருந்திருந்தால், அவர் இந்த நிலைக்கு ஆளாகியிருக்க மாட்டார்.

ராமநாம உச்சரிப்பின் மூலம், தானே ராமனாகி விடும் அளவுக்கு அதை ஒரு மந்திரமாகவே இவர் கைக்கொண்டு விட்டார். இறைவனின் திருவிளையாடல்கள் எவ்வளவு ரசமானவை. கடவுள் மனித அவதாரம் எடுக்கலாம் எனில், மனிதன் கடவுள் அவதாரம் எடுக்கக் கூடாதா என்ன?

தாளமும், இசையும், ஆவேசக் குரல்களும் சேருகின்ற போது ஏற்படும் பரவசத்தின் உச்ச கட்டத்தில் விளைகின்ற ஆனந்தம் குடிவெறி மாதிரி, ஒரு தடவைக்கு ஒரு தடவை மிகுதியான அளவில் இந்தப் பக்தர்களுக்கு தேவைப்படுகிறது.

நடைமுறை வாழ்க்கையில் இருந்து ஒருவனை விலக்கி, ஒருவனின் அறிவை எது மயங்கச் செய்கிறதோ, அதுவே போதை. அது கடவுள் பக்தியானால் என்ன? கள்ளின் போதையானால் என்ன?

ஒரு சம்சாரிக்கு, ஒரு கிருகஸ்தனுக்கு எந்த அளவு பக்தி இருக்கலாமோ அந்த அளவு இருப்பதுதான் லௌகிகம். இதை அவருக்கு எடுத்துச் சொல்லும் அளவுக்கு அவரைவிட ஞானஸ்தர்களோ, கல்விமான்களோ, பெரியவர்களோ யாரும் அவருடன் இல்லாது போயினர்.

அந்தத் தம்பி இந்த அண்ணனால் வளர்க்கப்பட்டவன். சிறு வயதிலிருந்தே அண்ணன் மீது தம்பிக்கு ஒரு 'ஹீரோ ஒர்ஷிப்' - வீர வழிபாட்டுணர்வு - இருந்திருக்க வேண்டும்.

இந்த வீட்டில் நேரம், காலம் இல்லாமல் நடந்துவரும் களேபரத்தைக் குறித்து ஏற்கனவே இரண்டொரு புகார்கள் போலீசுக்குப் போயிருந்தன. கடைசியில் அந்த வீட்டிலிருந்தே ஒரு ஆள் வந்தவுடன் போலீசார் நடவடிக்கை எடுத்தனர். இன்ஸ்பெக்டரைக் கண்டதும்,

"குகனே வருக! நின்னொடும் ஐவரானோம்" என்று தழுவிக் கொண்டார், பக்தர்.

மூன்று மாதங்கள் அந்த பஜனைக் கூடத்தில் தூண்டாமணி விளக்குகள் எரியாமல் கிடந்தன. அந்தத் தெருவைப் பொறுத்தவரை அது ஒரு மங்கல சூசகமாக இருந்தது.

சில வாரங்களில் ஆபிசரின் மனைவியும், சகோதரரும் சிகிச்சை அளிக்கப்பட்டு, குணம் அடைந்து, சாதாரண மனிதர்களாக வீட்டிற்குத் திரும்பி வந்து விட்டனர். பாவம்! அவர் இன்னும் உள்ளேயே இருக்கிறார். யார் நம்பினால் என்ன, நம்பா விட்டால் என்ன? அவர் உறுதியாக நம்புகிறார். அவர் ராமாவதாரம்தானாம்!

அவருக்குத்தான் அந்த நோய் பீடித்து முற்றிவிட்டது. அவரது மனைவியும் சகோதரரும் அவர்மீது கொண்ட நம்பிக்கையில் அவரைச் சந்தேகிக்காமல் அவரால் பாதிக்கப்பட்டு விட்டனர். நடந்து போன நிகழ்ச்சிகளை எண்ணி அவர்கள் இப்போது வருத்தமுறுகின்றனர். அவரது நோய் இந்த அளவுக்கு முற்றுவதற்குத் தாங்களும் காரணமாகி விட்டோமே என்று எண்ணியெண்ணி மனம் புழுங்குகின்றனர்.

அவரைப் பார்க்க வந்திருந்த அவர்களையும் நான் 'உள்ளே' தான் சந்தித்தேன். என்னோடு வெளியே வரும்போது-

"பகவான் பெயரைச் சொன்னதுக்கு இப்படி ஒரு பலன் கிடைக்கக் கூடாது" என்று கண்கலங்கக் கூறினாள் அவர் மனைவி.

"இதைப் பத்தி எழுதுங்க சார்! ரொம்ப நல்லது. ஆனால், கடவுள் மேலே பழி போட்டுடாதேங்கோ. நம்மோட பைத்தியக்காரத்தனத்துக்குக் கடவுள் என்ன பண்ண முடியும்?" என்றார் அவரது சகோதரர்.(எழுதப்பட்ட காலம்: 1972)
நன்றி: அவர்கள் உள்ளே இருக்கிறார்கள், ஜெயகாந்தன் - ஐந்தாம் பதிப்பு: 2000 - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1

13 February 2006 

காலமெல்லாம்... காதல் வாழ்க...

Image hosting by Photobucket


உன்னை நினைத்தே...
உரலை இடித்தேன்...

thinking of you...
hitting URL...
Blogger.com!


Gravitation can not be held
responsible for
people falling in love.

- Albert EinsteinOne should always be in love.
That is the reason
one should never marry.

- Oscar Wilde

07 February 2006 

சகலகலா வல்லவன்

தோழர் முகமூடி அவர்களுக்கு இந்த பாடலை டெடிகேட் செய்கிறேன், தல படித்து+கேட்டு மகிழவும்.

இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ
காலேஜு டீனேஜு பெண்கள் எல்லோர்க்கும் மீது கண்கள்
இளமை இதோ இதோ இனிமை இதோ இதோ

வாலிபத்தில் மன்மதன் லீலைகளில் மன்னவன்
ராத்திரியில் சந்திரன்..ரசிகைகளின் இந்திரன்
நான் ஆடும் ஆட்டம் பாருங்கள் நிகரேது கூறுங்கள்
நான் பாடும் பாட்டைக் கேளுங்கள் கைத்தாளம் போடுங்கள்
ஊர் போற்றவே பேர் வாங்குவேன் நான் தான் சகலகலா வல்லவன்....

.............இளமை இதோ இதோ................

ஹிந்தியிலும் பாடுவேன் ல..ல..லல..வெற்றி நடை போடுவேன் ல..ல..லல
ஏக் துஜே கேலியே...ல ..ல..லல ... ஏண்டி நீ பாத்தியே ல..ல..லல
எனக்காக ஏக்கம் என்னம்மா களத்தூரின் கண்ணம்மா
உனக்காக வாழும் மாமன் தான் கல்யாண ராமன் தான்
நாள் தோறும்தான் ஆள் மாறுவேன் நான் தான் சகலகலா வல்லவன்..

...............இளமை இதோ இதோ................

கம்பெடுத்து ஆடுவேன் ல..ல..லல..
கத்திச் சண்டை போடுவேன் ல..ல..லல...
குத்துவதில் சூரன் நான் ல..ல..லல..
குஸ்திகளில் வீரன் நான் ல..ல..லல..
எனை யாரும் ஆய்தால் ஆகாது அது தானே கூடாது
என்னை வெல்ல யாரும் கிடையாது எதிர்க்கின்ற ஆளேது
யார் காதிலும் பூ சுற்றுவேன் நான் தான் சகலகலா வல்லவன்

...............இளமை இதோ இதோ....................


படம்: சகலகலா வல்லவன்
இசை: இளையராஜா
பாடியவர்: SPB


Mugamoodi, may you listen to this song here

06 February 2006 

உலக நீதி

உலக நீதிஆசிரியர்: உலகநாதர்


#1
ஓதாமல் ஒருநாளும் இருக்க வேண்டாம்
ஒருவரையும் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
மாதாவை ஒருநாளும் மறக்க வேண்டாம்
வஞ்சனைகள் செய்வாரோடு இணங்க வேண்டாம்
போகாத இடந்தனிலே போக வேண்டாம்
போகவிட்டுப் புறம் சொல்லித் திரிய வேண்டாம்
வாகாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமானை வாழ்த்தாய் நெஞ்சே#2
நெஞ்சாரப் பொய் தன்னைச் சொல்ல வேண்டாம்
நிலையில்லாக் காரியத்தை நிறுத்த வேண்டாம்
நஞ்சுடனே ஒருநாளும் பழக வேண்டாம்
நல் இணக்கம் இல்லாரோடு இணங்க வேண்டாம்
அஞ்சாமல் தனிவழியே போக வேண்டாம்
அடுத்தவரை ஒரு நாளும் கெடுக்க வேண்டாம்
மஞ்சாரும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே#3
மனம்போன போக்கு எல்லாம் போக வேண்டாம்
மாற்றானை உறவு என்று நம்ப வேண்டாம்
தனம் தேடி உண்ணாமல் புதைக்க வேண்டாம்
தருமத்தை ஒருநாளும் கெடுக்க வேண்டாம்
சினம் தேடி அல்லலையும் தேட வேண்டாம்
சினந்து இருந்தார் வாசல் வழிச் சேர வேண்டாம்
வனம் தேடும் குறவருடை வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே#4
குற்றம் ஒன்றும் பாராட்டித் திரிய வேண்டாம்
கொலை களவு செய்வரோடு இணங்க வேண்டாம்
கற்றவரை ஒருநாளும் பழிக்க வேண்டாம்
கற்புடைய மங்கையரைக் கருத வேண்டாம்
கொற்றவனோடு எதிர்மாறு பேச வேண்டாம்
கோயில் இல்லா ஊரில் குடி இருக்க வேண்டாம்
மற்று நிகர் இல்லாத வள்ளிபங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே#5
வாழாமல் பெண்ணை வைத்துத் திரிய வேண்டாம்
மனையாளை குற்றம் ஒன்றும் சொல்ல வேண்டாம்
வீழாத படுகுழியில் வீழ வேண்டாம்
வெஞ்சமரில் புறம் கொடுத்து மீள வேண்டாம்
தாழ்வான குலத்துடனே சேர வேண்டாம்
தாழந்தவரைப் பொல்லாங்கு சொல்ல வேண்டாம்
வாழ்வாரும் குறவருடைய வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே#6
வார்த்தை சொல்வார் வாய் பார்த்துத் திரிய வேண்டாம்
மதியாதார் தலைவாசல் மிதிக்க வேண்டாம்
மூத்தோர் சொல் வார்த்தைகளை மறக்க வேண்டாம்
முன்கோபக் காரரோடு இணங்க வேண்டாம்
வாத்தியார் கூலியை வைத்திருக்க வேண்டாம்
வழிபறித்துத் திரிவாரோடு இணங்க வேண்டாம்
சேர்ந்த புகழாளன் ஒரு வள்ளி பங்கன்
திருக்கை வேலாயுதனைச் செப்பாய் நெஞ்சே#7
கருதாமல் கருமங்கள் முடிக்க வேண்டாம்
கணக்கு அழிவை ஒருநாளும் பேச வேண்டாம்
பொருவார் தம் போர்க்களத்தில் போக வேண்டாம்
பொது நிலத்தில் ஒருநாளும் இருக்க வேண்டாம்
இருதாரம் ஒருநாளும் தேட வேண்டாம்
எளியோரை எதிரிட்டுக் கொள்ள வேண்டாம்
குருகாரும் புனம் காக்கும் ஏழை பங்கன்
குமரவேள் பாதத்தைக் கூறாய் நெஞ்சே#8
சேராத இடம் தனிலே சேர வேண்டாம்
செய்த நன்றி ஒருநாளும் மறக்க வேண்டாம்
ஊரோடும் குண்டுணியாய்த் திரிய வேண்டாம்
உற்றாரை உதாசினங்கள் சொல்ல வேண்டாம்
பேரான காரியத்தைத் தவிர்க்க வேண்டாம்
பிணைபட்டுத் துணை போகித் திரிய வேண்டாம்
வாராரும் குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே#9
மண் நின்று மண் ஓரம் சொல்ல வேண்டாம்
மனம் சலித்து சிலிக்கிட்டுத் திரிய வேண்டாம்
கண் அழிவு செய்து துயர் காட்ட வேண்டாம்
காணாத வார்த்தையை கட்டுரைக்க வேண்டாம்
புண்படவே வார்த்தைகளைச் சொல்ல வேண்டாம்
புறம் சொல்லித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
மண் அளந்தான் தங்கை உமை மைந்தன் எங்கோன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே#10
மறம் பேசித் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வாதாடி வழக்கு அழிவு சொல்லை வேண்டாம்
திறம் பேசிக் கலகமிட்டுத் திரிய வேண்டாம்
தெய்வத்தை ஒருநாளும் மறக்க வேண்டாம்
இறந்தாலும் பொய்தன்னைச் சொல்ல வேண்டாம்
ஏசலிட்ட உற்றாரை நத்த வேண்டாம்
குறம் பேசி வாழ்கின்ற வள்ளி பங்கன்
குமரவேள் நாமத்தை கூறாய் நெஞ்சே#11
அஞ்சு பேர் கூலியைக் கைக்கொள்ள வேண்டாம்
அது ஏது இங்கு என்னில் சொல்லக் கேளாய்
தஞ்சமுடன் வண்ணான் நாவிதன் தன் கூலி
சகல கலை ஓதுவித்த வாத்தியார் கூலி
வஞ்சமற நஞ்சு அறுத்த மருத்துவச்சி கூலி
மகா நோவுதனைத் தீர்த்த மருத்துவன் கூலி
இன்சொல்லுடன் இவர் கூலி கொடாத பேரை
ஏதெது செய்வானோ ஏமன்றானே#12
கூறாக்கி ஒரு குடியைக் கெடுக்க வேண்டாம்
கொண்டைமேல் பூத்தேடி முடிக்க வேண்டாம்
தூறாக்கித் தலையிட்டுத் திரிய வேண்டாம்
துர்ச்சனராய் திரிவாரோடு இணங்க வேண்டாம்
வீறான தெய்வத்தை இகழ வேண்டாம்
வெற்றியுள்ள பெரியாரை வெறுக்க வேண்டாம்
மாறான குறவருடை வள்ளி பங்கன்
மயிலேறும் பெருமாளை வாழ்த்தாய் நெஞ்சே#13
ஆதரித்துப் பலவகையால் பொருள்கள் தேடி
அருந்தமிழால் அறுமுகனைப் பாட வேண்டி
ஓதுவித்த வாசகத்தால் உலகநாதன்
உண்மையாய்ப் பாடிவைத்த உலக நீதி
காதலித்துக் கற்றோரும் கேட்ட பேரும்
கருத்துடனே நாள்தோறும் களிப்பினோடு
போதமுற்று மிக வாழ்ந்து புகழும் தேடிப்
பூலோகம் உள்ள அளவும் வாழ்வார் தாமேமுற்றும்.

e-text from: http://www.infitt.org/pmadurai/mp022.html

04 February 2006 

ஐயகோ... Blogger


Blogger ரொம்ப படுத்துறதுனால ஒரு சோதனை பதிவு போடலாம்னு....

Shiki, Masaoka. (1867-1902).

I want to sleep
Swat the flies
Softly, please.

After killing
a spider, how lonely I feel
in the cold of night!

For love and for hate
I swat a fly and offer it
to an ant.

A mountain village
under the pilled-up snow
the sound of water.

Night; and once again,
the while I wait for you, cold wind
turns into rain.

The summer river:
although there is a bridge, my horse
goes through the water.

A lightning flash:
between the forest trees
I have seen water.


Source: http://www.toyomasu.com/haiku/?#shiki

03 February 2006 

நடைபாதையில் ஞானோபதேசம்


இடம்: மூர் மார்க்கெட்டுக்குள் மிருகக் காட்சிச் சாலைக்குப் போகிற வழியில் எஸ்.ஐ.ஏ.ஏ. திடலுக்கு நேரே வேலியோரப் பிளாட்பாரம்.

நான் போகிற நேரத்தில் அந்த மாந்திரீகக்காரக் கிழவர் கடையைக் கட்டிக் கொண்டு புறப்படத் தயாராகிறார்.

"அடடா, கொஞ்சம் முந்திக் கொள்ளாமல் போய்விட்டோமே" என்று அங்கலாய்க்கிறார் கூட வந்தவர்.

"அதனாலென்ன? போய்க் கொஞ்சம் நெருக்கமாக நாம் நின்றோமானால், சற்று நேரத்தில் இன்னும் பலர் நிற்க ஆரம்பித்து விடுவார்கள். அப்புறம் இந்த 'ஆடியன்ஸை' விட முடியாமல் கட்டிய கடையைப் பிரிக்க ஆரம்பித்து விடுவார் மனுஷன்" என்று கூறினேன். நானும் நண்பரும் போய் நிற்கிறோம். பெட்டி மேல் பெட்டியாக அடுக்கி வைத்துத் துணியாலும் கயிற்றாலும் இறுக்கி இறுக்கி மூட்டையைக் கட்டிக் கொண்டே பக்கத்திலிருந்த ஒரு நாட்டுப்புறவாசியிடம் உற்சாகமாகப் பேசிக்கொண்டிருக்கிறார், மாந்திரீகர். அவர் பேச்சில் பல இடங்களில் குறில்-நெடில் வித்தியாசம் இல்லாமல் எல்லா வார்த்தைகளும் நீண்டே ஒலிக்கிறது.

"மந்திரேம் மாயம் எல்லாம் ஒரு பக்கம் தள்ளூய்யா. வாக் சுத்தம் ஓணும். சுத்தமான வாக்குதான் மந்தரம். சொல்லுதான்யா நெருப்பூ. மனஸ் சுத்தமா இருக்கணும். கெட்ட நெனப்பு, 'இவனே அயிச்சுடணும்', 'அவனே ஒயிச்சுடணும்'னு நெனக்கிற மனஸ் இருக்கே- அதான்யா ஷைத்தான். ஷைத்தான் இங்கே கீறான்யா..இங்கே! வேறே எங்கே கீறான்? மானத்திலே இல்லை... ஷைத்தானும் இங்கேதான் கீறான். ஆண்டவனும் இங்கேதான் கீறான். நல்ல நெனப்பூ ஆண்டவன்; கெட்ட நெனப்பூ ஷைத்தான்" என்று மார்பில் தட்டி நெஞ்சை உணர்த்துகிறார்.

"எல்லாரும் நல்லாருக்கணூம்னு நெனைக்கிறான் பாரூ... அவனே மந்திரேம், மாயம், பில்லீ, சூனீயம், பேய் பிசாசூ ... ஒண்ணும் (ஒரு நாசுக்கில்லாத வார்த்தையைக் கூறித் தன் கருத்துக்கு அழுத்தம் தந்து) செய்ய முடியாது...இத்தெ மனசிலே வெச்சுக்க..."

"துட்டூக்கோசரம்...வவுத்துக்காக அக்குரமம் பண்ணறது நம்ம தொயில் இல்லே... எதுவோ தமாஷீக்குத்தான் மந்திரேம், மாயமெல்லாம்... தொயில் மருந்தூ குடுக்கறது... ஆனா, மருந்து செய்யறதுக்குத் துட்டூ ஓணும்பா... இந்த மருந்தூ தெருவிலே வெளையுதூன்னு நெனைச்சிக்கீனியா?... அபுரூபமான மூலிகைங்க... வேருங்க... மஸ்தான சரக்குங்க... எல்லாம் சேத்து உடம்பே கசக்கிப் பாடு பட்டு செய்யறது இந்த மருந்தூ... நோவு வந்துட்டா துட்டெப் பார்க்கலாமா?... வர் ரூபா வர் ரூபாவா இருவது ஊசி போட்டுக்கினு நோவை வெச்சிக்கினு இருக்கறாங்க... பத்து ரூவா பத்து ரூவாவா ரெண்டு ஊசி போட்டுக்கினா நோவு ஓடுது... அத்தெ நென்சிப் பார்க்கறதில்லே..."

"அந்தக் காலத்திலே தொரைங்களுக்கு, நவாப்புங்களுக்கெல்லாம் மருந்தூ குடுத்து, வித்தெ காமிச்சி மெடல் வாங்கி இருக்கேன்... செட்டீ நாட்டுப் பக்கமெல்லாம் போயிருக்கேன். அப்பல்லாம் இந்த பாபாவுக்கு ரொம்ப மரியாதி, அந்த ஸைட்லே. அப்பல்லாம் வெள்ளைக்கார தொரைங்க அள்ளிக் குடுப்பானுங்க... எண்ணீக் குடுக்கற பயக்கமே கெடையாது... இப்பத்தான் நம்ம மாதிரி தாடி வெச்சிக்கினு கால்லே செருப்பூ இல்லாமெ வெள்ளைக்கார தொரைங்க பிச்சேக்காரனுங்க மாதிரி இங்கே சுத்தறானுங்க..." (இங்கே அவர் குறிப்பிடுவது நாமெல்லாம் 'ஹிப்பீஸ்' என்று சொல்கிறோமே, அவர்களை.)

"நாம்பள் செகந்தரபாத், பூனா, பம்பாய், கான்பூர் எல்லாம் சுத்தினவன்தான்... அந்தக் காலத்திலே ரெண்டு கோழி இருவது ரொட்டி துண்ணுவேன்... இப்பத்தான் சோத்துக்கே தாளம் போடுது... அடே! அதிக்கென்னா... அதி வர் காலம்; இதி வர் காலம்... ஆனா மருந்து அன்னக்கிம் இதான்... இன்னக்கிம் அதான்... வித்தேகூட அப்பிடித்தான். நல்ல மனஸ் ஓணும்பா. வாக் சுத்தம்... மனஸ் சுத்தம் இருக்கு... ஆண்டவன் நம்ப கூட இருக்கறான்..."

"இன்னொருத்தனுக்குக் கெடுதி நெனைக்காதே. நீ கெட்டுப் பூடுவே... நல்லதே நெனை. ஆண்டவனை தியானம் பண்ணு. எதிக்கோசரம் ஆண்டவனை தியானம் பண்ணூ சொல்றேன்... ஆண்டவனுக்கு அதினாலே எதினாச்சும் லாபம் வருதூ... இல்லேடா, இல்லே! உனுக்குத்தான் லாபம் வருது. கெட்ட விசயங்களை நெனைக்கிறதுக்கு நீ யோசனை பண்ணமாட்டே... ஆண்டவனை நெனைச்சிக்கடான்னா மேலேயும் கீயேயும் பார்த்துக்கினு யோசனை பண்றே... எல்லாத்துக்கும் நல்ல மனஸ் ஓணும்..."

"சரிப்பா... நாயி ஆவுது... வெயிலு பட பேஜாரா கீது... சைதாப்பேட்டைக்குப் போவணும்... நா வரேம்பா. ஆமா, நீ எப்போ ஊருக்குப் போறே?" என்று அந்த நாட்டுப்புறத்துக் கஸ்டமரை விசாரிக்கிறார்.

"சாயங்காலம் ஆவும்" என்கிறார் கஸ்டமர்.

"போற வயிமேலே சைதாப்பேட்டையிலெ வூட்டாண்டேதான் இருப்பேன்... வந்தூ பாரூ... மருந்தூ தயார் பண்ணி வெச்சிருக்கேன். வாங்கிக்கினு போ. இன்னாப்பா யோசிக்கிறே? துட்டூ கொண்டாரலியா?"

நாட்டுப்புறத்துக் கஸ்டமர் பல்லைக் காட்டுகிறார்.

"துட்டூ கெடக்குது. மருந்து வந்து வாங்கிக்கினு போ. நோவு இருக்கும் போது மருந்தூ குடுக்கணும். துட்டூ இருக்கும்போது துட்டூ வாங்கிக்கறேன்... அப்புறமாக் கொடு. உடம்புக்கு நோவு வந்தா மருந்தூ இருக்குது... மனஸ் நோவுக்கு ஆண்டவன்தான் பாக்கணும்... நல்ல மனஸ்தான் ஆண்டவன். கெட்ட மனஸ் ஷைத்தான்.." என்ற ஒரு சூத்திரத்தைப் பல தடவை திருப்பிச் சொன்னார் அந்த பாபா.

அவர் பெயர் பாபா என்று அந்தக் கஸ்டமரைக் கேட்டுத் தெரிந்து கொண்டேன்.

மூட்டை கட்டியான பிறகு சில வினாடிகள் கண்களை மூடி மார்புக்கு நேரே இரு கைகளையும் ஏந்தி, சிறிது கடவுளைத் தியானம் செய்த பிறகு காவடி மாதிரி ஒரு கம்பின் இரு முனைகளிலும் மூட்டையைக் கட்டித் தொங்க விட்டுத் தோளில் தூக்கிக் கொண்டு எழுபது வயதுக்கு மேலான பாபா தெம்புடன் நடக்க ஆரம்பித்தார்.

நான் காஞ்சிப் பெரியவாளிடமும், ராமகிருஷ்ண பரமஹம்சரிடமும், பைபிளிலும், நீதி நூல்களிலும் பயில்கிற ஞானத்தையே- இந்த நடைபாதைப் பெரியவர் தன்னிடம் வந்து கூடுகிறவர்களுக்கு உபதேசம் செய்வதைக் கண்டேன்.

ஞானங்களும் நல்லுபதேசங்களும் வாழ்க்கையின் எல்லா வழிகளிலும் நிகழ்ந்து கொண்டுதான் இருக்கின்றன.

மகான்களையும், வேத வித்துக்களையும், நீதி நூல்களையும் நாடிச் சென்று ஞானம் பெற எல்லா மனிதர்க்கும் முடிவதில்லை. எனவே இந்த மாதிரி மனிதர்களின் மூலம் அது மூர்மார்க்கெட் நடைபாதையில் கூட விநியோகிக்கப்படுகிறது.

இந்த பாபா ஒரு ஞானவான் தான்.


நடைபாதையில் ஞானோபதேசம் - ஜெயகாந்தன்
(எழுதப்பட்ட காலம்: 1972 வாக்கில், "நான் மீண்டும் சந்திக்கிறேன்" என்னும் தொடரில் வெளிவந்த இந்தப் படைப்பு "அவர்கள் உள்ளே இருக்கிறார்கள்' என்ற புத்தகத்தில் "நான் சந்தித்த இவர்கள்" என்னும் தலைப்பின் கீழ் இடம் பெற்றுள்ளது.)
நன்றி: அவர்கள் உள்ளே இருக்கிறார்கள், ஜெயகாந்தன் - ஐந்தாம் பதிப்பு: 2000 - மீனாட்சி புத்தக நிலையம், மதுரை - 1