பயிற்றிப் பல கல்வி தந்து...
'பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்' - பாரதி.
ஒரு மொழியும் அந்த மொழியைச் சார்ந்தவர்களும் வளர்வதற்குத் தங்குதடையற்ற மொழிச் சுதந்திரம், கல்விச் சுதந்திரம் இருத்தல் வேண்டும்.
கல்வி ஒரு காலத்தில் கற்பவனின் சுதந்திரத்தைப் பறித்து அவர்களை சமூக அடிமைகளாக்கும் கருவியாகவே இருந்து வந்திருக்கிறது. நமது அடிமைக் கால மெக்காலே கல்வி முறை, அதுவே கல்வியின் நோக்கம் என்ற பிரகடனத்துடனே செயல்பட்டது.
அக்காலத்தில் கல்விக் கூடங்களையே புறக்கணித்த ஞானவான்கள் பலர் தோன்றினார்கள். எழுதப் படிக்கத் தெரியாத சான்றோர்களும், தனவந்தர்களும், வணிகர்களும்கூட இருந்தனர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்கள் இவர்களின் தொழில்களில் உதவியாளர்களாகவும் ஊழியர்களாகவும் இருந்தனர். எழுதப் படிக்கத் தெரிந்தவர்களும் கற்றவர்களும் பெரும்பாலோர் அரசாங்க அடிமை உத்தியோகங்களையே மிகுதியும் நாடினர். அந்தப் பணிகளில் சிறப்படைந்தோரும் உண்டு. அவ்விதச் சிறப்புக்கு ஆங்கில மொழியறிவும் கல்வியும் உறுதுணையாக இருந்ததால் கல்வியின் பிரிக்க முடியாத வளர்ச்சியின் அம்சமாக ஆங்கில மொழி இடம் பெற்றது.
ஒருவர் கற்றவரா இல்லையா என்று பரஸ்பரப் பழக்கத்தில் கணிப்பதற்குக் கூட ஒருவரின் ஆங்கில அறிவே ஓர் அளவுகோலாகக் கருதப்படுகிறது.
ஆங்கிலத்தின் உதவியினால்தான் நாம் விவேகானந்தரையும், காந்திஜியையும், நேருஜியையும், நவீன இந்தியாவையும் உலக இலக்கியங்களையும் அறிந்தோம்; பயின்றோம்; தேர்ச்சியும் பெற்றோம்.
தமிழர்களாகிய நாம் இப்போது சுதந்திர புருஷர்கள். நாம் எந்த மொழியைக் கற்ற போதிலும் அதில் பாண்டித்தியம் பெற்ற போதிலும் அந்த மொழிக்காரர்களுக்கோ அவர்களது அரசியலுக்கோ நாம் அடிமையாகி விட மாட்டோம். நமது சிறப்பை அவர்களிடம் நிரூபிக்கிற தமிழர்களாகத்தான் இருப்போம்.
ஆங்கிலத்துக்கும் நமக்கும் இருக்கும் சம்பந்தம் ஒரு மாயை அல்ல, அது ஒரு மோகம் மட்டும் அல்ல; அது ஒரு நிதர்சனம்; ஓர் அவசியம்; ஆங்கிலம் நம்மை நமக்குள்ளேயும் உலகத்தோடும் இணைகிற ஓர் இன்றியமையாத இந்திய மொழியாகி விட்டது. அதனால்தான் தமிழ் நாட்டில் இந்தியை எதிர்த்தவர்கள்கூட ஆங்கிலத்தை நாம் பயில வேண்டிய மொழியாக - இருமொழிக் கொள்கையின் இன்னொரு மொழியாக - அங்கீகரித்தார்கள். ஆங்கிலம் தவிர்த்த - ஆங்கிலம் அல்லாத ஒரு கல்வி முறையை நாம் கற்பனை கூடச் செய்ய முடியாது.
சுதந்திரத்துக்குப் பிறகு கல்வியின் அவசியத்தை எல்லாத்தரத்து மக்களும் உணர்ந்தனர். கல்வி கற்போரும் கல்விக் கூடங்களும் பல மடங்கு பெருகின.
தமிழைத் தாய் மொழியாக மட்டுமே கொண்ட - பற்றோ பக்தியோ, பொருளாதார லாபமோ, உத்தியோகமோ பிழைப்போ ஏதும் இல்லாத பெரும்பாலான தமிழ் மக்கள், கல்வி அறியாமையிலிருந்து விடுவித்து - சமூக அந்தஸ்தில், தொழில் துறையில், அறிவியல் துறையில், சட்டத்துறையில், மருத்துவ - பொறியியல் துறைகளில் தம்மை உருவாக்கிக் கொள்ளவும், அதன் மூலம் நாட்டின் பிற பகுதிகளிலும், மேலை நாடுகளிலும் சென்று பணியாற்றவும் உதவும் என்ற இலக்குடன் கல்வி கற்பதை அவசியம் என்று தங்கள் சந்ததிகளுக்கு உணர்த்தினர்.
ஏற்கனவே தமிழகத்தில் ஆங்கில வழிக் கல்விக் கூடங்கள் இருந்தன; இருக்கின்றன. அவற்றில் மேற்குடி மக்களே பயின்றனர். சுதந்திரத்துக்குப் பிறகு நடுத்தர வர்க்கத்தினரும் ஆங்கிலக் கல்விக்கும் ஆங்கில வழிக் கல்விக்கும் அதிக முக்கியத்துவம் தந்தனர். மக்களிடையே கல்வி அறிவு வளரவேண்டும் என்பதில் சுதந்திரம் பெற்ற அரசும் தீவிர நாட்டம் கொண்டிருந்ததன் விளைவாய் அவற்றுக்கு அங்கீகாரமும் மான்யமும் வழங்கியது. அரசுப் பள்ளிகளில் இந்தி விலக்கப் பட்டதால், இரு மொழிக் கொள்கையின் விளைவாக ஆங்கிலம் நடைமுறையில் முதலிடம் பெற்றது.
முன்பெல்லாம் நடைமுறையில் ஆரம்பக் கல்வி முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழ் வழிக் கல்வியும், ஆங்கிலமும் - அதாவது தமிழ் வழியே ஆங்கில அடிப்படைக் கல்வியும் பயிற்றுவிக்கப் பட்டது. அதாவது ஆரம்ப முதலே தமிழ் வழிக்கல்வி முறையிலும் ஆங்கிலம் ஒரு முக்கியப் பாடமாகப் பயிற்றுவிக்கப் பட்டு, உயர் கல்வியில் ஆங்கில வழிக் கல்வியே முற்றாக வழங்கப்பட்டது. தமிழ் வழிக் கல்வி என்பது உயர்கல்வியில் ஒரு மொழிபெயர்ப்பு வழிக் கல்வியாகத்தான் வளர முடிந்திருக்கிறது.
தமிழகத்தில் வாழ்கிறவர்கள் அனைவரும் தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்கள் அல்ல. மேலும் தமிழையும் ஆங்கிலத்தையும் அறிந்த அளவு கூடத் தங்கள் தாய்மொழியில் புலமை பெற்றவர்கள் அல்லர். வீட்டில் உறவினர்களோடு மட்டும் அந்த மொழியில் உரையாடும் பழக்கமுடையவர்கள் பலர். இன்னும் சிலருடைய தாய் மொழிக்கு எழுத்து வடிவம் இல்லாததால் அவர்கள் தங்கள் தாய்மொழி அல்லாத தமிழையோ ஆங்கிலத்தையோதான் பயிற்சி மொழியாகக் கொள்ள வேண்டும்.
தங்கள் தாய்மொழியல்லாத ஒரு மொழியில்தான் கல்வி பயில வேண்டும் என்ற சூழ்நிலையில் உள்ளவர்கள் ஆங்கிலத்தையே பயிற்சி மொழியாகக் கொள்ளுவது இயல்பும் நியாயமுமாகும்.
தமிழைத் தாய் மொழியாகக் கொண்டவர்களும் கூடத் தமிழை ஒரு மொழியாகப் பிழையற எழுதப் படிக்கக் கற்றுக் கொண்டால் போதும். பிற துறைகளை ஆங்கிலத்தின் மூலமே, அதுவும் ஆரம்ப முதலே ஆங்கில வழியில் கற்பிப்பதே தமது குழந்தைகளின் கல்வியறிவுக்கு உதவும் என்று நம்புபவர்களும் அண்மைக் காலத்தில் பெருகி உள்ளனர். அவ்விதம் பயின்று பயனடைந்தவர்களும் இந்தத் தலைமுறையில் பெருகி உள்ளனர். அவர்களின் தமிழறிவு எப்படியிருந்த போதும் அவர்களே தமிழகத்துக்குப் பெருமையும் பொருளாதார வளமும் சேர்ப்பவர்களாக உயர்ந்துள்ளனர். அவர்களும் தமிழர்கள் தான் என்பதை யார் மறுக்க இயலும்?
அவர்களில் யாரும் தமிழை மறந்துவிட வில்லை. தமிழின் மீது கொண்ட அபிமானத்தைத் துறந்துவிடவில்லை. தமிழின் பெருமையை, நமது கலாசாரத்தை உலகெங்கும் பரப்பும் தமிழ்த் தொண்டர்களாக அவர்களே செயல்படுகிறார்கள்.
ஆக, இதுகாறும் நமது நடைமுறையில் உள்ள கல்விச் சுதந்திரத்தின் விளைவாக நமது மக்களிடையே எல்லாத் தரப்பினரிடையிலும் கல்வி பரவி வருகிறது. இது மேலும் பரவித் தமிழகத்தில் கல்லாதவரே இல்லை என்ற நிலை உருவாக வேண்டும் என்பதே நமது சமூக நோக்கம்.
எனினும் தமிழின் மீது உணர்ச்சிகரமான பற்றுடைய தமிழ்ச் சான்றோரும், திராவிட அரசியலில் ஒரு பிரிவினரும் தமிழகத்தில் பெருகிவரும் ஆங்கிலக் கல்வி மோகத்தையும், தமிழையே புறக்கணிக்கும் ஆங்கில வழிக்கல்வி நர்சரிகளையும், கான்வெண்டுகளையும் கண்டு மனம் பதைத்து ஆங்கில வழிக் கல்வியையே அகற்றிவிட வேண்டும் என்று ஆர்ப்பரிக்கின்றனர்.
அதைத் தொடர்ந்து ஆரம்பக் கல்வி ஐந்தாம் வகுப்பு வரை எல்லாப் பள்ளிகளிலும் தமிழ் வழிக் கல்விதான் இருக்க வேண்டும் என்று சட்டம் கொண்டுவந்து நிர்ப்பந்தம் செய்வது கல்விச் சுதந்திரத்திலும் கற்போரின் அடிப்படை உரிமையிலும் அரசு தலையிடுவதாகும் என்று ஏற்கனவே ஆங்கில வழிக் கல்வி பயிற்றுவிப்போரும் பெற்றோரும் நீதி கேட்டுப் போராட்டம் தொடங்கியுள்ளனர்.
அவர்களை ஒட்டு மொத்தமாக தமிழ் மொழியின் விரோதிகள் என்று வசைபாடி விடுவது நியாயமும் ஆகாது; பிரச்னைக்குத் தீர்வுமாகாது. மேலும் அந்த ஆங்கில வழிக் கல்வியாதரவாளர்கள் தமிழை ஒரு பாடமாகப் பயிற்றுவிக்கச் சித்தமாக இருப்பதாகவும் சொல்கிறார்கள்.
தமிழ் வழிக் கல்வி பரவுவதற்குப் பிரச்சாரம் செய்தல் நல்லது. அதே அளவு கல்விச் சுதந்திரத்தைக் கௌரவித்தலும் வேண்டும்.
'பயிற்றிப் பல கல்வி தந்து - இந்தப் பாரை உயர்த்திட வேண்டும்' என்று பாரதி கூறியது ஆழ்ந்த பொருளுடையது.
(எழுதப்பட்ட காலம்: 2000)
நன்றி: ஜெயகாந்தன் ஒரு பார்வை - டாக்டர். கே.எஸ். சுப்பிரமணியன், முதல் பதிப்பு: 2000, கலைஞன் பதிப்பகம், சென்னை - 600 017.
ஒரு நிமிடம் ஞானபீடத்தின் பதிவுலகம் hack செய்யப்பட்டதோ என்று மகிழ்ந்தேன்.... கடைசியில் டிஸ்க்ளெய்மர் படிக்கும் போதுதான் உண்மை தெரிந்தது... ஹ¤ம்.. அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டும்
Posted by முகமூடி | Fri Aug 12, 01:30:00 pm (IST)