ஆறுமுகன் பாடல்கள் சில
ஓராறு முகமும் ஈராறு கரமும்
தீராத வினைதன்னைத் தீர்க்கும் - துன்பம்
வாராத நிலைதன்னைச் சேர்க்கும் - ஐயன்
(ஓராறு)
ஆராவமுதென அருள்மழை பெய்யும்
கூரான வேல் கொண்டு கொடுமைகளைக் கொய்யும்
(ஓராறு)
சுவாமி மலையில் சிவகுருவென்று திரு
சீரலைவாயிலில் சூரனை வென்று
தேமதுர மொழியாள் தேவானையை மணந்து
திருப்பரங்குன்றினில் தரிசனம் தந்த - அந்த
(ஓராறு)
மாமனைப்போல் இரு மாதுடன் கூடி
மாலையில் பழமுதிர்ச் சோலையிலாடி
மாமயிலேறிட திருத்தணியைத் தேடி
மோகமெல்லாம் தீர்ந்து ஆவினன்குடி சேர்ந்த
(ஓராறு)
ஆறுதல் அருள்வாய் ஆறுமுகா - உலகில்
வேறு துணையில்லை வேல்முருகா
(ஆறுதல்)
மாறுபடும் கருத்தை உடையவரும் கண்டால்
மயங்கிடும் அழகே வடிவெனக் கொண்டாய்
(ஆறுதல்)
இச்சையெனும் சக்தி வடிவான வள்வள்ளி
உலகை இயக்கும் சக்தி வடிவான தெய்வானை
பச்சை மயில் பரிவுடன் பக்திதரும் சக்தி
பகுத்தறியும் ஞான சக்தி வடிவேலா
(ஆறுதல்)
குன்றுதோறும் குடியிருக்கும் குமரா - உள்ளக்
கோயிலிலே குடியிருக்க வருவாய் - மனிதக்
குடும்பமெல்லாம் நிம்மதியைத் தருவாய் - மனிதக்
குடும்பமெல்லாம் நிம்மதியைத் தருவாய்
ஆறுமோ ஆவல்
ஆறுமுகனை நேரில் காணாது
(ஆறுமோ)
ஏறு மயிலேறி குன்றுதோறும் நின்றாடியவன்
பெரும்புகழும் தெரிந்துமவன் பேரழகைப் பருகாமல்
(ஆறுமோ)
ஞான குருபரன் தீனத்தருள் குகன்
வானவரும் தொழும் ஆனந்த வைபோகன்
காணக் கிடைக்குமோ கூறுதற்கில்லாமல்
அற்புத தரிசனம் கற்பனை செய்தால் மட்டும்
(ஆறுமோ)
lyrics copied from:
http://mysite.verizon.net/vze2my9a/tamillyrics/tdsa/tamilunicode/mur_idx.htm