எச்சரிக்கை:
இந்தக்கதை மற்றும் சம்பவங்கள் யாவும் கற்பனையே; இதில் வரும் கதாபாத்திரங்களும், எவர்சில்வர் பாத்திரங்களும் கூட கற்பனையே!. யாருடைய சொந்தக்கதையையும் ரயில், பஸ், கப்பல் மற்றும் விமானப் பயணத்தில் அவர்கள் சொல்லக் கேட்டு எழுதியது அல்ல, அல்ல, அல்ல!!!.
"அதுல அப்டி என்னதாங்க இருக்கு?. எப்போ பாத்தாலும் அதுலயே ஒக்காந்துக்குட்டு, லொட்டு, லொட்டுன்னு தட்டிக்கிட்டு?" - கேட்டாள் மனைவி !.
அவள் சொன்ன அது = computer.
"ஏதோ இருக்கு, தட்டுறேன்; இப்போ அதுக்கு என்னாங்கற" -யாமும் வினாவினோம்.
"தட்டுங்க, வேணாங்கல, ஆனா, அதுல புளிக்கொழம்பு வெக்க முடியுமா ஒங்களால?" - அவள், அவளே தான் கேட்டாள்.
யாம் உள்ளுக்குள் (புளிக்)குழம்பி, தீர்க்கமாய் ஒரு பார்வை ஒன்றையே பதிலாய் அளித்தோம். (வேறென்ன செய்ய!).
அவளும் நோக்கினாள், உக்கிரமாய்.
அவளே தொடர்ந்தாள்: "இந்த புள்ளய பாத்துக்கிட்டா, நா சாப்பாடு செய்றேன். இல்லாட்டி என்னால சமைக்க முடியாது. பொழுதன்னிக்கும் நா ஒருத்தியே புள்ளய பாத்துக்குட்டு, வீட்டையும் கவனிச்சுக்கிட்டு கஷ்டப்படனும்; இவரு மட்டும் ஹாயா அதுல ஒக்காந்துகிட்டு, பொழுத ஒட்டுவாரு; கூடமாட ஒத்தாச பண்ணா என்ன? அதுவா வந்து சோறு போட்டு கொழம்பு ஊத்தப்போவுது?" அவளுக்குத் தெரிந்த எல்லாவற்றையும் சொல்லி, "அத செய்ய முடியுமா, இத செய்ய முடியுமா" என்று
கேள்வி அவள் கேட்க, வளைந்தோம் யாம்.
எமது செவிக்கு உணவு முடிந்தது; வயிற்றுக்கு ஈய வேண்டுமே. அவளை சமைக்க வேண்டி, (வேண்டி!)
"சரி, சரி கத்தாத, விடு, புள்ளய நா பாத்துக்கறேன், இங்க என்னோட ரூம்ல விட்டுட்டு, கதவ சாத்திட்டுப் போ. " என்றோம் யாம்.
கதவை அடைத்தால், குழந்தை மேல் ஒரு கண் வைத்தால் போதும்; இல்லாவிட்டால், கண்கள் கடன் வாங்கினாலும் பத்தாது.
அவ்வளவு துருதுரு.
சிந்திய வெண்பனி, சிப்பியின் முத்து, தத்தக்கா பித்தக்கா என்று சோபாவைப்பிடித்துக்கொண்டே மெல்ல மெல்ல அடியொற்றி வந்தது. வந்து, அப்...தத்...தத்தா" என்றது; குழலும் யாழும் சேர்ந்திசைத்தாலும் தோற்றுப் போகும் போல இருந்தது.
"டாய் குட்டீ...., இங்க வா; வா......" விளித்தோம் யாம், கண்கள் மட்டும் கணிணித்திரையை விட்டு விலக்காமலேயே.
தோள் கண்டார்; தோளே கண்டார். Blog கண்டார்; Blog-கே கண்டார்.
குட்டியோ, அங்கே, இங்கே தவழ்ந்து கொண்டிருந்தது.
இரண்டு கண்கள், இரண்டு காட்சி கண்டுகண்டிருந்தோம் யாம்.
சற்று நேரம் கழித்து,
"ரொம்ப பொறுப்பா வேல செய்றாளே, அப்படி என்ன செய்றா" என்று பார்ப்பதற்காக, யாம், குட்டியைத் தூக்கிக்கொண்டு, ஹாலுக்கு சென்றோம். அங்கே, அவள் சமைப்பதை ஒதுக்கிவைத்துவிட்டு,
யாம் கண்ட காட்சி,
ஜன்ஜனக்கு ஜன்ஜனக்கு ஜா
ஜிங்ங்..
ஜன்ஜனக்கு ஜன்ஜனக்கு ஜா
........................
அதே,
மெட்டி ஒலி...
ஒரு நாடகமன்றோ நடக்குது!
பின்கதை: "என்னமோ பெருசா, அதுல கொழம்பு வெக்கமுடியுமான்னு கேட்ட, இப்போ இதுல (tv) கொழம்பு வெப்பியா" என்று யாம் அவளை மடக்கிவிட்ட பெருமிதத்துடன் கேட்க,
"அடடா வந்துட்டாருய்யா, கேள்வி கேக்க; வேலய முடிச்சுட்டு அக்கடான்னு ஏதோ கொஞ்ச நேரம் tv பாக்க ஒக்காந்தா,"
என்று ஆரம்பித்து ஏதோதோ பேசினாள். அவள் நிறுத்தியவுடன், "அப்ப சரி, சாப்பாடு ஆச்சுன்னா சரி; என்னா சாப்பாடு" என்று யாம் கேட்க, "ம்... இருங்க, சீரியல் பாத்துட்டு சமச்சா ஒன்னும் கெட்டுப்போகாது; 'செல்வி' முடிஞ்சோன்னதான் சமைக்கவே ஆரம்பிக்கனும்" என்றாள்.
குட்டி சத்தம் போட்டு சிரித்தது.